வெள்ளி, 15 செப்டம்பர், 2017

மகளிர் மட்டும் - makalir mattum review in tamil

ஜோதிகா, சரண்யா, பானுப்பிரியா, ஊர்வசி நடித்து வெளிவந்துள்ள ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம் மகளிர் மட்டும். இன்றைய பெண்ணியச் சிந்தனையை பொழுதுபோக்கு சார்ந்த சினிமாவில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர்.

பிரபா தனது மாமியார் கோமாதாவுக்காக முகநூலில் ஒரு கணக்கைத் தொடங்கி அவர்களுடைய பள்ளித்தோழிகள் ராணி, சுப்புவைத் தேடுகிறாள். ஒரு பெரிய பணக்காரனுடன் கல்யாணம் ஆகி கணவனிடமிருந்தும், மகனிடமிருந்தும் உரிய மரியாதை இல்லாமல் வீட்டிலேயே சம்பளம் இல்லாத வேலைக்காரியாக ராணி இருக்கிறாள். ஒரு குடிகாரனுக்கு கல்யாணம் ஆகி படுத்த படுக்கையில் இருக்கும் அவனது மாமியாருக்கு சேவை செய்வதிலேயே காலம் கழிப்பவளாக சுப்பு இருக்கிறாள்.

இவர்கள் மூவரையும் சந்தோசப்படுத்துவதற்காக அவர்களை ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறாள் பிரபா. இதற்கிடையில் ராணியைக் காணவில்லை என்று கணவனும், மகனும் தேடுகின்றனர். இந்தத் தேடுதலில் கணவன் தனது தாயின் மதிப்பை உணர்ந்து கொள்கிறான். 

படுத்த படுக்கையில் இருந்த மாமியார், சுப்புவின் கவனிப்பு கிடைக்காமல் மூன்று நாளில் இறந்து போகிறாள். சுப்புவின் மதிப்பையும், தன்னுடைய கையாலாகாத் தனத்தையும் அறிந்து கொள்ளும் கணவன் குடியை விட்டுவிடுகிறான். தோழிகள் அனைவரும் வீடு செல்ல அவர்களுக்கான மரியாதை கிடைப்பதுடன் படம் முடிகிறது.

இந்தக் கதையை சரியான திரைக்கதையாக நகைச்சுவை, சோகத்துடன் கலந்து படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். பெண்களுக்கும் தோழமை இருக்கிறது. பிரிவின் துயரம் இருக்கிறது. கோபம் இருக்கிறது. ஏக்கங்கள் இருக்கின்றன. அதைக் கொஞ்சம் தேடிப்பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

இன்னொரு பக்கம் பெண்ணியம் என்பது ஆண்மையை கொஞ்சம் அடக்கி வைத்து ஆணாதிக்கத்திற்குப் பதிலாக பெண்ணாதிக்கத்தை நிலை நிறுத்துவதுதான் என்பது இன்றைக்கு பலர் புரிந்து கொண்ட விசயமாக இருக்கிறது. ஆண்களைப் போல உடை உடுத்த வேண்டும், ஆண்களைப் போல பேச வேண்டும், ஆண்களைக் மட்டம் தட்ட வேண்டும் என்று பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்திலும் ஒரு சில இடங்களில் மட்டம் தட்டியும் இருக்கிறார்கள்

இந்தப்படம் அந்தமாதிரியாக இல்லாமல், ஆண்களின் உலகை எதிர்மறையாகக் காட்டுவதன் மூலமாக பெண்களை உயர்த்திப்பிடிப்பதாக இல்லாமல் பெண்களின் உணர்வுகளை, உலகத்தை காட்டுவதன் மூலம் தனது கருத்தை வெளியிடுகிறது. 

“இங்கயும் குக்கரா?”, “ஏன் நீ போய் பிரசவம் பார்க்கப் போகிறயாக்கும்”, “ஆய் போன ஆந்தை மாதிரி மூஞ்சி” சரியான நேரத்தில் வரும் நகைச்சுவைகள் அருமை. மகளிர் மட்டும் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படம்தான்.

2 கருத்துகள்: